கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு - விரைவில் முழு கொள்ளளவை எட்டும்


கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு - விரைவில் முழு கொள்ளளவை எட்டும்
x
தினத்தந்தி 30 Dec 2019 3:45 AM IST (Updated: 29 Dec 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது.

காட்டுமன்னார்கோவில், 

லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. காவிரியின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பதுடன், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்குவகிக்கிறது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம். இதன் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.

பருவமழையால் ஏரி நிரம்பியதால் அதன் மூலம் விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கினர். தற்போது நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடை பணிகளும் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே சம்பா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும், அந்த சமயத்தில் பருவமழை தீவிரமடைந்து இருந்ததாலும் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

தற்போது வறண்ட வானிலையே நிலவுவதால், ஏரியின் நீர்இருப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. நேற்று காலை நீர்மட்டம் 45.60 அடியாக இருநத்து. இதையடுத்து ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் கீழணையில் இருந்து வடவாறு வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன்படி தற்போது வினாடிக்கு 1000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி நீர்மட்டம் 46.21 அடியாக உயர்ந்தது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து நீர் வரத்து இருந்தால் ஏரி மீண்டும் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு எட்டும் பட்சத்தில் இந்த ஆண்டில் 5-வது முறையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டதால், எதிர்வரும் கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர், விவசாயத்துக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திடும் விதமாக தற்போது ஏரியின் நீர்மட்டத்தை குறையவிடாமல் பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 39 அடிக்கு குறையாமல் இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீரை அனுப்பி வைக்க முடியும். இதற்கிடையே வீராணம் ஏரியின் முழு ஆதாரமாக இருக்கும் கீழணை 9 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது 8½ அடியாக நீர்மட்டம் உள்ள நிலையில் முக்கொம்பில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 1000 கனஅடி நீர் வீராணத்துக்கும், மீதமுள்ள 500 கனஅடி சி.என்.ஆர்., சி.எஸ்.ஆர். வழியாக பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story