திருச்சி மாவட்ட 8 ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: 1,337 மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு


திருச்சி மாவட்ட 8 ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: 1,337 மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 29 Dec 2019 11:00 PM GMT (Updated: 29 Dec 2019 5:49 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடப்பதையொட்டி, 1,337 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2-ம் கட்டமாக 8 ஒன்றியங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது. 7 லட்சத்து 2 ஆயிரத்து 253 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

8 ஒன்றியங்களிலும் தேர்தலுக்காக 1,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்றியம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:-

மண்ணச்சநல்லூர்-217, லால்குடி-198, புள்ளம்பாடி-147, துறையூர்-177, தாத்தையங்கார் பேட்டை-132, உப்பிலியபுரம்-133, முசிறி-162, தொட்டியம்-171, ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் 1,337 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 105 கண்டறியப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள்

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக 102 வீடியோ கிராபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 52 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்களை கொண்டு நுண் பார்வையாளர்களாக 58 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் 10,137 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான பணி நியமன ஆணை நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டது.

வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு அலுவலர் களுக்கு மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, துறையூர், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம், முசிறி, மற்றும் தொட்டியம் ஊராட்சி ஒன்றியங்களில் 3-ம் கட்ட பயிற்சி மற்றும் பணிநியமன ஆணை வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் பொருள்கள் நேற்று மாலை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அவை முறையாக செல்வதையும் கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர் களுமான ராஜேந்திரன் (லால்குடி), மகாதேவன் (புள்ளம்பாடி), ஆர்.ராஜேந்திரன்( மண்ணச்சநல்லூர்) ஆகியோரும் உடன் இருந்தனர்.

வாக்குச்சாவடி தயார்

நேற்று மாலை 6 மணிக்குமேல் வாக்குச்சாவடிகளில் அனைத்து பொருட்களும் உரிய முறையில் வைக்கப்பட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தயாராக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

Next Story