தஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு


தஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 4:30 AM IST (Updated: 30 Dec 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 28 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கும், 276 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும், 589 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 4 ஆயிரத்து 569 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 462 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கி 16-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 17 ஆயிரத்து 606 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் வேட்புமனுக்கள் வாபஸ் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டது, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தவிர தற்போது மொத்தம் 13 ஆயிரத்து 470 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

1,390 வாக்குச்சாவடி

அதன்படி முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி திருவையாறு, பூதலூர், அம்மாப்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய 7 ஒன்றியங்களில் நடைபெற்றது. இதில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 2-வது கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

2-வது கட்டமாக தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதற்காக 1,390 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் 11 ஆயிரத்து 356 அலுவலர்கள் பணிபுரிகிறார்கள்.

345 பதற்றமானவை

2-வது கட்ட தேர்தலில் 345 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என 89 பேர் தேர்தல் நுண்பார்வையாளர்களாகவும் பணியாற்ற உள்ளனர். 2-வது கட்ட தேர்தலில் 128 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. 130 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தல் 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெறுகிறது. இதில் 14 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், 137 ஒன்றிய கவுன்சிலர், 274 ஊராட்சி தலைவர், 1,435 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி ஆகியவை அடங்கும். இதில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 481 ஆண்கள், 3 லட்சத்து 53 ஆயிரத்து 15 பெண்கள், இதர பாலினத்தவர் 45 பேர் என மொத்தம் 6 லட்சத்து 89 ஆயிரத்து 541 பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதற்கான வாக்குப்பெட்டிகள் நேற்று காலை அந்தந்த ஒன்றியங்களில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன. இதற்காக 170 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தஞ்சை ஒன்றியத்தில் 349 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான படிவங்கள், உபகரணங்கள், ஒட்டுச்சீட்டு போடுவதற்கான பெட்டிகள் அனைத்தும் வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டன.

இந்த தேர்தலில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், ஓய்வு பெற்ற போலீசார் என 2,800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
1 More update

Next Story