2-ம் கட்ட தேர்தல்: தேனி உள்பட 6 ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனி உள்பட 6 ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
தேனி,
தேனி மாவட்டத்தில் மொத்தம் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அதில், ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக கடந்த 27-ந்தேதி தேர்தல் நடந்தது. ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 76.74 சதவீதமும், கடமலை-மயிலை ஒன்றியத்தில் 72.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
2-வது கட்டமாக தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த 6 ஒன்றியங்களில் 7 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 65 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 82 ஊராட்சி மன்ற தலைவர்கள், 744 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 898 பேரை தேர்வு செய்ய நேரடி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.
இதில், 7 ஊராட்சி மன்ற தலைவர்கள், 152 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 159 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 739 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 2,176 பேர் போட்டியிடுகின்றனர்.
2-ம் கட்ட தேர்தலுக்கு மொத்தம் 585 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.
வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் நேற்று எடுத்துச் செல்லப்பட்டன. 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்தும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்ட லாரிகளின் முன்பும் ஜீப்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். தேர்தல் பணியில் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களும் நேற்றே பணிக்கு சென்று விட்டனர். அங்கு வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், 300 ஊர்க்காவல் படையினர், 160 முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசாருக்கு நேற்றே அவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நேற்று மாலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர். அத்துடன் போலீஸ் அதிகாரிகளும் சுழற்சி முறையில் ரோந்து சென்று வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story