பெட்டி, பெட்டியாக ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது


பெட்டி, பெட்டியாக ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2019 10:15 PM GMT (Updated: 29 Dec 2019 8:06 PM GMT)

நாகர்கோவிலில் டாஸ்மாக் கடை அருகே பெட்டி, பெட்டியாக ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுக்கடைகள் செயல்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெற இருப்பதால் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேல் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட தடை விதித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டிருந்தார்.

மேலும் டாஸ்மாக் கடைகள் மூடலையொட்டி, திருட்டுத்தனமாக மதுவிற்பனை நடைபெறாமல் தடுக்க போலீசாரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து மதுக்கடைகள் இருக்கும் பகுதிகளில் போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பறிமுதல்

இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி நாடான்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக வடசேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது காமராஜர்புரத்தை சேர்ந்த சிவா (வயது 31) என்பவர் அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்தது தெரிய வந்தது. அதாவது மதுக்கடை மூடப்பட்டதும் கடைக்கு அருகிலேயே மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சிவாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரத்து 468 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story