உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் - கலெக்டர் தகவல்


உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2019 10:30 PM GMT (Updated: 29 Dec 2019 8:12 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் இன்று (திங்கட்கிழமை) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 1006 வாக்குச்சாவடிகளில் இன்று 2-ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 263 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து 106 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராவும், 123 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. 34 இடங்களில் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், முதுகுளத்தூர் யூனியன் ஆணையாளர் சாவித்ரி, உதவி தேர்தல் அதிகாரி மங்களேசுவரி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story