பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு


பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Dec 2019 10:30 PM GMT (Updated: 29 Dec 2019 8:23 PM GMT)

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குச்சாவடிகளில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கைள அனுப்பி வைக்கும் பணியை நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டிருப்பது குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து மல்லூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டி அறை, வாக்கு எண்ணும் அறைகள், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சேலம் அருகே சித்தனூர் காயத்ரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், உதவி திட்ட அலுவலர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, மணிவண்ணன், மணிமேகலை, சேலம் தாசில்தார் மாதேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story