மதுரை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு


மதுரை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 Dec 2019 11:00 PM GMT (Updated: 29 Dec 2019 9:31 PM GMT)

மதுரை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அதில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய 6 ஒன்றிய பகுதிகளில் கடந்த 27-ந் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, கள்ளிக்குடி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. அதில் மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 72 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 2 லட்சத்து 82 ஆயிரத்து 605. பெண்கள் 2 லட்சத்து 88 ஆயிரத்து 441. மூன்றாம் பாலினத்தவர்கள் 26 ஆகும்.

இவர்கள் வாக்களிப்பதற்காக 1,093 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 220 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 60 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

பஞ்சாயத்து தலைவர்கள்

இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 62 பேர் போட்டியிடுகின்றனர். 112 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. அதில் திருமங்கலத்தில் ஒரு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே மீதமுள்ள 111 பதவிகளுக்கு 496 பேர் போட்டியிடுகின்றனர்.

232 கிராம பஞ்சாயத்து தலைவர்் பதவிகள் உள்ளன. அதில் 18 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 214 பதவிகளுக்கு 741 பேர் போட்டியிடுகின்றனர். 1,761 கிராம வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. அதில் 529 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு 3 ஆயிரத்து 352 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று வாக்குப்பதிவு

இந்த தேர்தலில் பணியாற்ற 8 ஆயிரத்து 918 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்தெந்த வாக்குச்சாவடியில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. முதல் கட்ட வாக்குப் பதிவின் போது தேர்தல் மிக அமைதியாக நடந்தது. அதே போல் இரண்டாம் கட்ட தேர்தலையும் மிக அமைதியாக நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Next Story