7 ஒன்றியங்களில் 2-ம் கட்ட தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கடலூர்,
தமிழகம் முழுவதும் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்று 2–ம் கட்ட தேர்தல் அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நடந்தது.
இதற்காக 1,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அந்த வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வீடியோகிராபர், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இது தவிர நுண் பார்வையாளர்களும் வாக்குச்சாவடிகளில் இருந்தபடி பிரச்சினைகள் ஏதும் நடக்காமல் கண்காணித்தனர்.
இந்நிலையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையில் இருந்தபடி மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடக்கும் அனைத்தும் நிகழ்வுகளையும் வெப் கேமரா மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் இது பற்றி கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–
கடலூர் மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 53.31 சதவீதம் வாக்குகள் பதிவானது. 2 ஆயிரத்து 874 பதவிகளுக்கு நடக்கும் இந்த தேர்தலில் ஏற்கனவே 393 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதியுள்ள பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வீல் சேர் அமைக்கப்பட்டுள்ளது. 277 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளது. அதில் 116 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 78 வாக்குச்சாவடிகளில் வீடியோகிராபர்கள் அங்கு நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்து வருகின்றனர்.
81 வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் சிறு, சிறு பிரச்சினைகள் இருந்தது. அதை சீரமைத்து விட்டோம். டி.அருண்மொழிதேவன் வாக்குச்சாவடிகளில் கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று புகார் வந்தது. அந்த புகாரையும் சரி செய்து விட்டோம்.
இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், திட்ட அலுவலர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் உள்ளாட்சி தேர்தல் நடந்த 7 ஒன்றியங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். உசுப்பூர், அம்மாபேட்டை, குமராட்சி உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை அவர் பார்வையிட்டு, பாதுகாப்பு பணி குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story