காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாரடைப்பால் மரணம்
காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் செல்வம் (வயது 56). இவர் காங்கேயம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல தன்னுடைய அலுவலகத்தில் பணியில் இருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு செல்ல அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்த போலீசார் அவரை ஆம்புலன்ஸ் மூலம், காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா சித்தாலந்தூர் புதுப்பாளையம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று காலை 11 மணிக்கு அவரது உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்த துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வத்துக்கு ஜமுனா என்ற மனைவியும், கீர்த்திநாத், தருண்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story