குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தூத்துக்குடியில், கனிமொழி எம்.பி. வீட்டின் முன்பு கோலம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தூத்துக்குடியில், கனிமொழி எம்.பி. வீட்டின் முன்பு கோலம்
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 8:29 PM GMT)

தூத்துக்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கனிமொழி எம்.பி. வீட்டின் முன்பு நேற்று கோலம் போடப்பட்டது.

தூத்துக்குடி, 

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், அதை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் பெண்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு முன்பு கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோலம் போட்ட பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிர் அணியினர் வீடுகள் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோலம் போடும் படி கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டார்.

அதன்படி, இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி குறிஞ்சிநகரில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீட்டு வாசலில், ‘வேண்டாம் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.’ என்று வண்ண கோலம் போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Next Story