2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல்: தஞ்சை மாவட்டத்தில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு


2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல்: தஞ்சை மாவட்டத்தில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 8:33 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பூதலூர், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதற்காக 1,378 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

நேற்று 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் ஆகிய 7 ஒன்றியங்களில் தேர்தல் நடந்தது. இதற்காக 1,390 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் 11 ஆயிரத்து 356 அலுவலர்கள் பணியாற்றினர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறு, விறுப்பாக தொடங்கியது.

6¾ லட்சம் வாக்காளர்கள்

இதில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 481 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 53 ஆயிரத்து 15 பெண்வாக்காளர்கள், 45 இதர பாலினத்தவர் என மொத்தம் 6 லட்சத்து 89 ஆயிரத்து 541 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

தஞ்சை மாவட்டத்தில் 345 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என 89 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 128 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. 130 வாக்குச்சாவடி மையங்களில் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

காலை முதலே வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஆண்களை விட பெண்கள் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் அல்லது ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் அல்லது உறுப்பினர் பதவிக்காக 3 வாக்குகளை வாக்காளர்கள் பதிவு செய்தனர். ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் 2 வாக்குகளை பதிவு செய்தனர்.

மற்ற இடங்களில் 4 வாக்குகளை வாக்காளர்கள் பதிவு செய்தனர். முதியவர்கள், ஊனமுற்றவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி வசதி எதுவும் செய்யப்படவில்லை. இதனால் முதியவர்களையும், ஊனமுற்றவர்களையும் கை தாங்கலாக உறவினர்கள் அழைத்து வந்தனர்.

அமைதியாக நடந்தது

பெண்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தபோது பலர் தங்களது மகன், மகள்களையும் கூடவே அழைத்து வந்து வரிசையில் நின்றனர். வாக்குச்சாவடியில் வாக்களிக்க பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் வாக்களிக்க வரிசையில் நின்றபோது குழந்தைகளை கணவன்மார்கள் வாங்கி கொண்டு காத்திருந்தனர். மனைவி வாக்களித்துவிட்டு வந்த பிறகு அவர்களிடம் கைக்குழந்தைகளை கொடுத்துவிட்டு கணவன்மார்கள் வாக்களிக்க சென்றனர்.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சர்வ சாதாரணமாக நின்று கொண்டு தங்களது சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் வலியுறுத்தினர். அவர்களை போலீசார் வெளியே செல்லுமாறு கூறினர். மேலும் வாக்குச்சாவடி அருகில் கூட்டமாக நின்ற அவர்களை அங்கிருந்து செல்லுமாறு தொடர்ந்து போலீசார் வலியுறுத்திக்கொண்டு இருந்தனர். இதே போல் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தினர். தஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.


Next Story