கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியம் ஒத்தப்பட்டியில் வாக்காளர்கள் போராட்டத்தால் ஓட்டுப்பதிவு 4 மணி நேரம் தாமதம்


கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியம் ஒத்தப்பட்டியில் வாக்காளர்கள் போராட்டத்தால் ஓட்டுப்பதிவு 4 மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 9:09 PM GMT)

கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியம் ஒத்தப்பட்டியில் வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு 4 மணி நேரம் தாமதம் ஆனது.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஒத்தப்பட்டி கிராமம். இங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதாக இருந்தது. வாக்காளர்களுக்காக அலுவலர்கள் காத்திருந்தனர். ஆனால் இந்த கிராமத்தில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளதால், இங்குள்ள 90 வாக்காளர்களும் ஓட்டுப்போட செல்லாமல் தேர்தலை புறக்கணித்து சாலையில் கையில் கருப்புக்கொடியுடன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். இதனால் காலை 7 மணி தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு 4 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு தொடங்கி நடந்து முடிந்தது.

கிரு‌‌ஷ்ணராயபுரம்

கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியம், பாலராஜபுரம் ஊராட்சியில் உள்ள 3, 4-வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு வீரராக்கியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. இந்தநிலையில் காலை 8 மணி அளவில் வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊரான வீரராக்கியத்தில் வாக்களிக்க 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர். ஆனால் அவர்களிடம் தேர்தல் ஆணையம் கூறிய 11 விதமாக அடையாள அட்டைகளில் ஒன்றுமே இல்லை. வெறும் பூத் சிலிப் மட்டுமே வைத்திருந்தனர். இதனால் அவர்களை அங்கிருந்த அலுவலர்கள் வாக்களிக்க அனுமதிக்க வில்லை.

இதனால் அலுவலர்களுக்கும், அவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த துணை தாசில்தார் பிரபாகரன், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து, பூத் சிலிப்புகளை ஆய்வு செய்து அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

புறக்கணிப்பு

குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு பகுதியில் உள்ள 90 வாக்காளர்கள் பெயர்கள் 5-வது வார்டில் வாக்களிக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு 6-வது வார்டு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என கூறி தேர்தலை புறக்கணித்திருந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அடுத்த தேர்தலில் உங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 6-வது வார்டில் உள்ள வாக்காளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் வாக்குப்பதிவு செய்தனர்.

வாக்குப்பெட்டி மாற்றம்

குளித்தலை ஒன்றியம், வதியம் ஊராட்சிக்குட்பட்ட நடுவதியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு முடிவு நேரமான மாலை 5 மணிக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தனர். இதுதொடர்பாக தகவலறிந்து வந்த உதவி தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரன் வாக்களிக்க வரிசையில் நின்ற 50 வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கினார். பின்னர் டோக்கன் பெற்ற வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அனைவரும் வாக்கு செலுத்திய பின்னர் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

பின்னர் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது ஒரு வாக்குப் பெட்டியின் லாக் வேலை செய்யாத காரணத்தினால் அதை சீல் வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக வேறு இடத்திலிருந்து வேறு புதிய வாக்குப்பெட்டி கொண்டுவரப்பட்டது. பின்னர் பழுதான வாக்குப் பெட்டியில் இருந்த வாக்குச்சீட்டுகள் அனைத்தும் புதிதாக கொண்டுவரப்பட்ட வாக்கு பெட்டியில் மாற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Next Story