புதுக்கடை அருகே ஒரே நாளில் இரண்டு வீடுகளில் கதவை உடைத்து நகைகள் கொள்ளை


புதுக்கடை அருகே ஒரே நாளில் இரண்டு வீடுகளில் கதவை உடைத்து நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 31 Dec 2019 3:45 AM IST (Updated: 31 Dec 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே ஒரே நாளில் இரண்டு வீடுகளில் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கடை,

புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 39), ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று காலையில் இவருடைய மனைவி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு திரும்ப வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுக்கப்பட்டது.

மற்றொரு சம்பவம்

மேலங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அமுதகலா (36). இவர் சம்பவத்தன்று இரவு வெளியே சென்று விட்டு தோழி கவிதாவுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் உள்ளே மர்ம நபர் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அமுத கலாவும், அவரது தோழியும் சத்தம் போட்டனர். உடனே, அந்த நபர் வீட்டில் மாடியில் திறந்து கிடந்த கதவு வழியாக தப்பி ஓடினார்.

தொடர்ந்து, அவர்கள் அறையில் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6¼ பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

வீட்டில் மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடந்துள்ளது. எனவே, இரண்டு வீடுகளிலும் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள்தான் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story