உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாளே வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்ைக முடிந்த மறுநாளே (3-ந் தேதி) வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
மதுரை,
கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் மதுரை ஐகோர்ட்டில் நேற்று விடுமுறை கால கோர்ட்டு செயல்பட்டது.
நீதிபதிகள் வேல்முருகன், தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்தனர். அப்போது வக்கீல்கள் சிலர் ஆஜராகி, “தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ந்தேதி தேர்தல் நடந்தது. 2-ம் கட்டமாக இன்று (அதாவது நேற்று) தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் வருகிற 2-ந்தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின் போது, பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கையையும், வாக்கு எண்ணும் மையங்களின் உள்ளேயும், வெளிப்பகுதியையும் முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகளிடம் வக்கீல்கள் முறையிட்டனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வக்கீலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே வாக்கு எண்ணிக்கையை தனியாக வீடியோ பதிவு செய்ய வேண்டியதில்லை. மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாள்தான் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அவகாசம் இல்லை என்றார்.
அதற்கு நீதிபதிகள், “இன்னும் 2 நாட்கள் உள்ளதே?” என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி கூறி, இதுதொடர்பான விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பிற்பகலில் வக்கீல்கள் கோரிக்கை தொடர்பாக நீதிபதிகள் மீண்டும் விசாரணையை தொடர்ந்தனர்.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் வக்கீல் ஆஜராகி, “அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் வாக்கு எண்ணிக்கையையும், அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் நீதிபதிகள், “மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ நகலை மறுநாளே (3-ந்தேதி) மாைல 5 மணிக்குள், ஐகோர்ட்டு பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story