லாரி மோதி 17 மின் கம்பங்கள் சாய்ந்தன: குடிநீர் வழங்கக்கோரி தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை


லாரி மோதி 17 மின் கம்பங்கள் சாய்ந்தன: குடிநீர் வழங்கக்கோரி தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 Dec 2019 11:00 PM GMT (Updated: 31 Dec 2019 7:51 PM GMT)

மீன்சுருட்டியில் லாரி மோதி 17 மின் கம்பங்கள் சாய்ந்ததால் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டது. இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி வழியாக சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலைகள் அகலப்படுத்தும் பணிக்காக விக்ரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பட்டேல் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது.

இந்நிலையில் மீன்சுருட்டி அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தின் அருகே சாலை பணிகளுக்காக அந்நிறுவனம் சார்பில் மூலப்பொருள் தயாரிக்கும் உற்பத்தி கிடங்கு அமைக்கப்பட்டு அங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு மூலப்பொருளை எடுத்துச்சென்ற ஒரு லாரி உற்பத்தி கிடங்கில் அருகில் செல்லும் ஒரு உயர் அழுத்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதை கவனிக்காத அந்த லாரி டிரைவர் மின்கம்பத்தை இழுத்தபடியே சென்றுவிட்டார்.

17 மின் கம்பங்கள் சரிந்தன

இதன் காரணமாக அந்த மின் கம்பம் கீழே சரிந்து அந்த பாதையில் செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள மின்கம்பங்கள் சரிந்தன. இதில் 17 மின் கம்பங்கள் ஆங்காங்கே சரிந்து விழுந்தன. அப்போது மின்சாரம் இணைப்பில் இருந்தது. இதையடுத்து உடனே அந்த பகுதியில் செல்லும் மின்சாரத்தை மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக துண்டித்தனர். நள்ளிரவு என்பதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் நடமாட்டம் இல்லாததால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறுநாள் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பின்னர் வாக்குச்சாவடிக்கு போதிய மின்சாரம் வேண்டும் என்பதால் மின்சார வாரியத்தின் மூலம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்சார இணைப்பு உடனடியாக கொடுக்கப்பட்டன. இருப்பினும் கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர்.

முற்றுகை

பின்னர் மின்சார வாரிய ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை சரிபார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இருந்தபோதும், சில கிராமங்களுக்கு மட்டும் மின்சாரம் கொடுக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இல்லாத பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலர் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அந்த தனியார் நிறுவனத்தின் முன்பு குடிநீர் வழங்கக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்தி உங்களுக்கு தேவையான மின்சார இணைப்பை சீக்கிரமாக கொடுத்து விடுவோம் என்று உறுதி அளித்ததின் அடிப்படையில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் சாலை போடும் நிறுவனம் இதை சரியாக கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

வாக்குப்பதிவு தாமதம்

இந்த சம்பவத்தின் காரணமாக நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் போதிய மின்சாரம் இல்லாததால் சிறிது நேரம் வாக்குப்பதிவு செய்வதற்கு சிரமங்கள் ஏற்பட்டது. பின்னர் மாற்றுப்பாதையில் மின்சாரம் உடனடியாக தரப்பட்டதால் அதன் பிறகு சகஜ நிலைக்கு திரும்பியது.

நடமாட்டம்

நள்ளிரவில் இந்த விபத்து நடைபெற்றதால் அப்போது பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் நடமாட்டம் ஏதுமில்லை. இதனால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த மின் கம்பம் அருகே பாலமுருகன்(வயது 38) என்பவரின் வீடு அருகிலேயே விழுந்தது. அப்போது அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

Next Story