சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது கவர்னர் கிரண்பெடியிடம் பா.ஜனதா மனு


சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது கவர்னர் கிரண்பெடியிடம் பா.ஜனதா மனு
x
தினத்தந்தி 31 Dec 2019 11:00 PM GMT (Updated: 31 Dec 2019 9:45 PM GMT)

புதுவையில் சூதாட்ட விடுதிகள் தொடங்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கவர்னர் கிரண்பெடியிடம் பாரதீய ஜனதா கூட்டணியினர் மனு அளித்தனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தின் வருவாயை பெருக்க கேசினோ மற்றும் லாட்டரி உள்ளிட்டவற்றை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சியினர் பாரதீய ஜனதாவின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று கவர்னர் கிரண்பெடியை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார்கள். அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். அந்த மனுவில், புதுவை மாநிலத்தில் கேசினோ போன்ற சூதாட்ட விடுதிகள் என்ற போர்வையில் சூதாட்டம் மற்றும் விபசாரத்தை புதுச்சேரியில் கொண்டுவர முயற்சிக்கும் ஆளும் காங்கிரஸ் அரசின் முயற்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

எம்.எல்.ஏ.க்கள்

இந்த சந்திப்பின்போது எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி, பாரதீய ஜனதா மாநில துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், முதலியார்பேட்டை செல்வம், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் மற்றும் வி.சி.சி.நாகராஜன், தே.மு.தி.க. மாநில செயலாளர் வி.பி.பி.வேலு, பா.ம.க. தளபதி, கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் சந்திரசேகர், வீரவன்னியர் பேரவை அதிரடி அழகானந்தம், 5-வது தூண் அமைப்பை சேர்ந்த சக்திவேலு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story