ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள் - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு


ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள் - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2020 10:45 PM GMT (Updated: 1 Jan 2020 5:46 PM GMT)

கரூரில் புத்தாண்டு தினத்தையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள்- கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

கரூர்,

2019-ம் ஆண்டுக்கு விடைகொடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு 2020-ம் ஆண்டு புதிதாக பிறந்தது. இந்த ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள புனித தெரசம்மாள் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது வருகிற ஆண்டில் அனைத்து மக்களின் வாழ்விலும் துன்பம் உள்ளிட்ட இருள் நீங்கி, புத்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதை சுட்டி காட்டும் விதமாக பங்கு மக்கள் ஒளிவிளக்கினை கையில் ஏந்தியபடி ஏசுவை நினைத்து ஜெபம் செய்தனர். பின்னர் பங்கு தந்தை செபாஸ்டின் துரை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது பாதிரியார்கள் புத்தாண்டு வாழ்த்து கூறி நற்செய்தி வழங்கினர். அதனை தொடர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். மேலும் தேவாலய வளாகத்தில் இளைஞர்கள் பலர் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இதே போல், கரூர் சர்ச்கார்னரில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயம், புலியூர் குழந்தை ஏசு தேவாலயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களுக்கும் கிறிஸ்தவர்கள் சென்று புத்தாண்டை யொட்டி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் பல இடங்களில் வெடிக்கப்பட்டன. மேலும் இளைஞர்கள் கரூரின் முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக சென்று புத்தாண்டு வாழ்த்துக்களை... பொதுமக்களுக்கு தெரிவித்து கொண்டே சென்றதை காண முடிந்தது. இதைக்கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மெதுவாக சென்று, விபத்துக்களை தடுக்க முன்வறுமாறு அறிவுறுத்தினர்.

கரூர் பஸ் நிலையம் அருகே மனோகரா கார்னரில் போலீஸ் சார்பில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் கலந்து கொண்டு கேக் வெட்டினார். மேலும் பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.

வேலாயுதம்பாளையம் -குளித்தலை

இதேபோல வேலாயுதம்பாளையம் முல்லைநகர் கிறிஸ்துவ ஆலயத்தில் எஸ்.ஆர்.சற்குணம் தலைமையிலும், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியர் ஆலயத்தில் பங்குதந்தை லாசர் சுந்தரராஜ் தலைமையிலும், வேலாயுதம்பாளையம் ஹைஸ்கூல் மேடு பகுதியில் உள்ள பெந்தேகோஸ்தே ஆலயத்தில் போதகர் டேவிட்ராஜன் தலைமையிலும், புகளூர் மெயின் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துவநாதர் ஆலயத்தில் சபை போதகர் சேகர் தலைமையிலும், புஞ்சை தோட்டக்குறிச்சி தளவாபாளையம் பிலிப் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர் ஆலயத்தில் சபை போதகர் டாக்டர்.ஜான்துரை தலைமையிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். வேலாயுதம்பாளையத்தில் பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு வண்ண கோலமிட்டு புத்தாண்டை வரவேற்றனர். இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களை கூறி, கேக் வெட்டி கொண்டாடினர்.

குளித்தலை பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் குளித்தலை பகுதியில் பல்வேறு தெருக்களில் சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும், கேக்குகள் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர்.

கோவில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டு பிறப்பையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கல்யாண வெங்கடரமண சாமி கோவில், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரா கோவில், வெண்ணைமலை முருகன் கோவில், அபயிரதான ரெங்கநாதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பெரும்பாலானோர் நள்ளிரவில் தங்களது வீட்டு முன்பு கோலமிட்டனர். பின்னர் அக்கம், பக்கத்தினருக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டினை கொண்டாடி மகிழ்ந்தனர்.

முருகன் கோவில்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டு மற்றும் ச‌‌ஷ்டியையொட்டி முருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல நொய்யலில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், குந்தானிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புன்னம் பெரியூர் அம்மன் கோவில், குந்தானிபாளையம், திருக்காடுதுறை மாரியம்மன் கோவில், தங்காயி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

வல்லப கணபதி

இதேபோல வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன் கோவில், மாரியம்மன் கோவில், காகிதபுரம் வல்லப கணபதி கோவில், குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரர் கோவில், நீலமேகப்பெருமாள் கோவில், அய்யப்பன் கோவில், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல லாலாபேட்டையில் கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி அம்மன் ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story