குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக அய்யனார் கோவிலில் தேங்காய் உடைத்து நூதன போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக அய்யனார் கோவிலில் தேங்காய் உடைத்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2020 4:30 AM IST (Updated: 1 Jan 2020 11:31 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக அய்யனார் கோவிலில் தேங்காய் உடைத்து நூதன போராட்டம் கும்ப கோணத்தில் நடந்தது.

கும்பகோணம்,

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனக்கூறி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் யானையடி பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 108 தேங்காய் உடைத்து நூதன போராட்டம் நடந்தது.

இதில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பாலா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாநில செயலாளர் பாலா கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில், எதிர்க்கட்சியினர் மாணவர்களை தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தவறான கருத்துகள்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

இவர்களை நல்வழிப்படுத்த வேண்டி கோவில் முன்பு தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

ஆகம விதிகளுக்கு முரணானது

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலில் தமிழ் ஆண்டுகளை குறிக்கின்ற 60 படிக்கட்டுகள் இருக்கின்றன.

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு அன்றும் படி பூஜை செய்து பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக 60 படிகளுக்கும் பூஜை செய்திருக்கிறார்கள். இது ஆகம விதிகளுக்கு முரணானது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முருகன் தமிழ் கடவுள். எனவே இந்து சமய அறநிலையத்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story