அரியலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு திரளானவர்கள் கலந்து கொண்டனர்


அரியலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு திரளானவர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 2 Jan 2020 4:15 AM IST (Updated: 2 Jan 2020 1:33 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத் தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பிரகதீஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் ஆண்டிமடம் மேல அகத்தீஸ்வரர், செல்வ வினாயகர், சித்திவிநாகர், அழகு சுப்பிரமணியர், மாரியம்மன், கவரப்பாளையம் ஆஞ்சநேயர், ரெட்டப்பள்ளம் அய்யனார், பெரியகிரு‌‌ஷ்ணாபுரம் படைவெட்டி மாரியம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேவாலயங்களில் பிரார்த்தனை

வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை, தென்னூர் அன்னைலூர்து, ஆண்டிமடம் மார்த்தினார், பட்டணங்குறிச்சி லூர்துஅன்னை, கூவத்தூர் அந்தோணியார், கண்டியங்குப்பம் சலேத்மாதா, அகினேஸ்புரம் அகினேசம்மாள், கீழ்நெடுவாய் புனித அன்னம்மாள் ஆகிய தேவாலயங்களில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி பங்குதந்தையர்கள் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலிகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதேபோல் ஆண்டிமடம் புனித மார்ட்டினார் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பின் நிகழ்வினை சித்தரிக்கும் வகையில் மாட்டு தொழுவம்போல் குடில் அமைத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் இறைமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

சிறப்பு திருப்பலி

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான அடைக்கல மாதா திருத்தலத்தில் 2020 புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டு விழாவில் சுல்லங்குடி, திருமானூர் மாலத்தாங்குளம், விழுப்பனங்குறிச்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிறிஸ்தவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து புத்தாண்டு பிறப்பை கோலாகலமாக கொண்டாடினர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஆலயத்தின் பங்குதந்தை சுவக்கீன் மற்றும் உதவி பங்குத்தந்தை ஆல்வின் ஒன்றிணைந்து சிறப்பு திருப்பலி நடத்தி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஆசி வழங்கினர். இதேபோல் புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள மங்கல மாதா திருத்தலத்திலும், குலமாணிக்கம் கிராமத்திலுள்ள புனித இஞ்ஞாசியார் ஆலயத்திலும் புத்தாண்டு பிறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Next Story