2019-ம் ஆண்டில் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளது - போலீஸ் கமிஷனர் பேட்டி
2019-ம் ஆண்டில் சென்னை நகரில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், சென்னை நகரில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்து விரிவாக விளக்கி கூறினார்.
அவரது பேட்டி விவரம் வருமாறு:-
முடிந்து போன 2019-ம் ஆண்டில் சென்னை நகர போலீசாரின் செயல்பாடுகள் அனைத்து வகையிலும் சிறப்பாக உள்ளது. 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் சென்னை நகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தொடங்கினோம்.
அதன் முக்கியத்துவம் கடந்த ஓராண்டில் தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்து உள்ளன. சங்கிலி பறிப்பு வழக்குகள் எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 615 ஆகும்.
2019-ம் ஆண்டில் அந்த வழக்குகள் எண்ணிக்கை 307 ஆக பாதியாக குறைந்துள்ளது.
இதே போன்று கடந்த 3 ஆண்டுகளில் ஆதாய கொலைகள் வழக்கு எண்ணிக்கையை ஒப்பிடும்போது, அதுவும் 50 சதவீதமாக குறைந்து உள்ளது. கொலை வழக்குகளும் குறைந்து உள்ளன.
ரவுடிகள் மோதலில் நடந்த கொலை குற்றங்களும் குறைந்துள்ளன. வெளிமாநில கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
சாலை விபத்து வழக்குகளை ஒப்பிடுகையில், 2019-ம் ஆண்டில் 935 வழக்குகள் குறைந்துள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. அந்தவகையில் கடந்த ஆண்டில் சாலை விபத்து உயிரிழப்புகள் 45 குறைந்துள்ளன. காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 932 குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஒரு வரதட்சணை மரண சம்பவம் கூட சென்னை காவல் எல்லையில் நிகழவில்லை. 45 அம்மா ரோந்து வாகனங்கள் மிக சிறப்பாக செயல்படுகிறது.
தோழி திட்டம் மூலம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது. மொத்தத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்தியாவிலேயே சென்னை பாதுகாப்பான நகரமாக உள்ளது.
காவலன் செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து உள்ளனர்.
‘நிர்பயா’ திட்டத்தின் மூலமாக சென்னையில் ரூ.113 கோடி செலவில் 2 ஆயிரம் முக்கியமான இடங்களில் 6 ஆயிரத்து 500 சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளன.
‘போக்சோ’ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட 25 வழக்குகளில் 4 வழக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், இதர 21 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. தொலைபேசி வாயிலாக பேசி, கடன் வாங்கி தருவதாக அப்பாவி மக்களை ஏமாற்றிய பெரிய மோசடி கும்பல் அந்த பிரிவில் பிடிப்பட்டது.
‘கால் சென்டர்கள்’ மூலம் பொதுமக்களை ஏமாற்றிய மோசடி கும்பலை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கடந்த ஆண்டு 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 82 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்குகளில் ரூ.67 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளது.
இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபரின் சந்திப்பின் போது சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அனைவரின் பாராட்டையும் சென்னை மாநகர போலீஸ் பெற்று உள்ளது. மேலும் பல்வேறு போராட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சிறந்த பணிக்காக சென்னை நகர போலீசார் 4 உயரிய விருதுகளை பெற்று உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் ஈஸ்வரமூர்த்தி, அருண், தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஜெயராம், உளவுப்பிரிவு துணை கமிஷனர்கள் திருநாவுக்கரசு, டாக்டர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story