தேனி உள்பட 8 ஒன்றியங்களில், மந்தமாக நடந்த வாக்கு எண்ணிக்கை


தேனி உள்பட 8 ஒன்றியங்களில், மந்தமாக நடந்த வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2020 3:45 AM IST (Updated: 3 Jan 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

தேனி உள்பட 8 ஒன்றியங்களில் நேற்று வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடந்தது.

தேனி, 

தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஆகிய ஒன்றியங்களுக்கு கடந்த 27-ந்தேதியும், மற்ற ஒன்றியங்களுக்கு கடந்த 30-ந்தேதியும் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதற்காக 8 ஒன்றியங்களுக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேனி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணும் மையம் தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.

ஆண்டிப்பட்டி ஒன்றியத்துக்கு ஆண்டிப்பட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியிலும், கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு கடமலைக்குண்டு ஜி.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியிலும், பெரியகுளம் ஒன்றியத்துக்கு நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு காலையில் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் நியமிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணும் பணி தாமதமாக தொடங்கியது.

போடி ஒன்றியத்துக்கு போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியிலும், சின்னமனூர் ஒன்றியத்துக்கு சின்னமனூர் ஸ்ரீ கிரு‌‌ஷ்ணய்யர் பள்ளியிலும், உத்தமபாளையம் ஒன்றியத்துக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரியிலும், கம்பம் ஒன்றியத்துக்கு கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதாக இருந்தது. ஆனால், தேனி, ஆண்டிப்பட்டி, போடி உள்ளிட்ட இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகவே தொடங்கியது. மையத்திற்கு உள்ளே செல்வதற்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

ஊராட்சி மன்ற வார்டு வாரியாக வாக்குப்பெட்டிகள் வாக்குச் சீட்டுகளைப் பிரிக்கும் அறைகளுக்கு எடுத்து வரப்பட்டன. அங்கு வாக்குச்சீட்டுகள் நிறம் வாரியாக 4 பிரிவாக பிரிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து வாக்கு எண்ணும் அறைகளுக்கு வாக்குச்சீட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டன.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தனித்தனி அறைகளில் வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. தேனி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை மிகவும் மந்தமாகவே நடந்தது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆசியா மரியம் நேரில் சென்று பார்வையிட்டார்.

தேனி ஒன்றியத்தில் மொத்தம் 12 கிராம ஊராட்சிகள் உள்ளன. பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. வாக்குச்சீட்டுகளை பிரித்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடந்ததால் முடிவுகளை அறிவிப்பது தாமதமானது.

அதேபோன்று போடி, ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, பெரியகுளம், உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் ஆகிய வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை மந்தமாகவே நடந்தது. முழுமையான தேர்தல் முடிவு வெளியாவதற்கு நள்ளிரவு ஆகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 More update

Next Story