மகளிர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - கலெக்டர் பேச்சு


மகளிர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 3 Jan 2020 10:00 PM GMT (Updated: 3 Jan 2020 1:07 PM GMT)

தொட்டில் குழந்தை திட்டம் உள்பட குழந்தைகள், மகளிர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கலெக்டர் சிவன்அருள் பேசினார்.

திருப்பத்தூர், 

சமூக பாதுகாப்புத்துறை மற்றும் திருப்பத்தூர் எஸ்.ஆர்.டி.பி.எஸ். சிறப்பு தத்தெடுப்பு நிறுவனம் சார்பாக சட்டப்படியான தத்தெடுத்தல் விதிமுறைகள், சட்ட விரோத தத்தெடுப்பை தடுத்தல் குறித்து கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பத்தூரில் நடைபெற்றது. மாநில தத்து வள மையம் திட்ட இயக்குனர் கிறிஸ்துதாஸ் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.டி.பி.எஸ் சிறப்பு தடுப்பு மைய இயக்குனர் என்.தமிழரசி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சிவன்அருள் கலந்துகொண்டு குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு கையேடுகளை கிராம பகுதி சமுதாய செவிலியர்களுக்கு வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் குழந்தை தொட்டில் திட்டம் தொடங்கப்பட்டு குழந்தைகள், மகளிருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. சமுதாயத்தில் குழந்தைகள் தத்து எடுப்பது குறித்து எளிமையான தீர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தொண்டு நிறுவனம் செயல்படுகிறது.

சுகாதாரத்துறை 2031-ல் சாதிக்க வேண்டியதை 2019-ம் ஆண்டிலேயே சாதித்து உள்ளார்கள். இவர்களுக்கு அடுத்த இலக்கு குழந்தை இல்லாத பெற்றோர்கள் சட்டப்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் பதிவு செய்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் தத்து எடுக்க வேண்டும் என்பது தான்.

சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் குழந்தைகளை விலைக்கு வாங்குவோர் மீதும் குழந்தைகள் விற்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக தத்தெடுத்தலை தடுக்க செவிலியர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். குழந்தை பிறப்பு மற்றும் பேறுகாலத்தில் வரக்கூடிய கர்ப்பிணிகளின் விவரங்கள் ஆகியவற்றை கவனமாக ஆராய வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம், சட்டவிரோத தத்தெடுப்பு எதுவுமில்லாத திருப்பத்தூரை முதன்மை மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட நன்னடத்தை அலுவலர் ரமேஷ், வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஏ.ஜி.சிவகலைவாணன், வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.நிஷாந்தினி, ஏ.ஞானசேகர் உள்பட பலர் பேசினார்கள்.

தத்தெடுப்பு திட்டம் பற்றிய விளக்கங்கள் பவர்பாயிண்ட் மூலமாக மட்டும் சட்டப்படி தத்து எடுக்கப்பட்ட பெற்றோரின் கருத்துக்கள் காணொலி காட்சி மூலமாக காண்பிக்கப்பட்டது. இதில் கிராம செவிலியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பணியாளர் செ.மங்களக்குமார் நன்றி கூறினார்.

Next Story