திருச்சிற்றம்பலம் அருகே, பயிர்களில் நெற்பழநோய் தாக்குதல்; மகசூல் குறைவு - விவசாயிகள் கவலை
திருச்சிற்றம்பலம் அருகே பயிர்களில் நெற்பழநோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் மகசூல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திருச்சிற்றம்பலம்,
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பழையநகரம் ஊராட்சியை சேர்ந்த அரசலங்கரம்பை பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில், நெற்பயிர்களில் நெற்பழ நோய் மற்றும் குருத்து பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் உள்ளது. இதனால் இப்பகுதியில் மகசூல் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பழைய நகரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த பல ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்யாததாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் வராததாலும் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.
இந்தநிலையில் இந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்தது. மேலும் மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரமாக மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக அரசலங்கரம்பை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் நெற்பழ நோய், குருத்துப்பூச்சி போன்றவற்றின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் பெருமளவு மகசூல் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கவலையில் உள்ளோம்.
எனவே சம்பந்தப்பட்ட விவசாயத்துறை அலுவலர்கள் நோய் தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story