புளியங்குடியில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு - வாலிபர் கைது
புளியங்குடியில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடி,
தென்காசி மாவட்டம் புளியங்குடி ஜின்னா நகர் 5-ம் தெருவை சேர்ந்தவர் செய்யது அலி. இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி நூர்ஜஹான் (வயது 28).
இவர் புத்தாண்டு தினத்தன்று இரவு தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் உறங்கி கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் முகத்தை துணியால் மூடிக் கொண்டு மர்மநபர் ஒருவர் நூர்ஜஹான் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த நூர்ஜஹானின் கழுத்தில் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கென விழித்த அவர், திருடன் திருடன் என கூச்சலிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த மர்மநபர், நூர்ஜஹானை தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் மர்மநபரை காணவில்லை.
பின்னர் இதுகுறித்து உடனடியாக நூர்ஜஹானின் உறவினர்கள், புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்து, மர்மநபரின் அடையாளங்களையும் தெரிவித்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டை தெருவை சேர்ந்த அப்பாஸ் மகன் ஜாகிர் உசைன் (28) என்பவர், நூர்ஜஹானிடம் சங்கிலி பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சங்கிலியையும் மீட்டனர்.
காயம் அடைந்த நூர்ஜஹான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் திருடனை கைது செய்து, நகையையும் மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story