வடகிழக்கு பருவமழையால் பயிர்கள் பாதிப்பு: மிளகாய் வத்தல் கிலோவுக்கு ரூ.75 உயர்வு
வடகிழக்கு பருவமழையில் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் காய்ந்த மிளகாய் வத்தல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்னர் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் உற்பத்தி வெகுவாக குறைந்தது. இதனால் தமிழகத்துக்கு வரும் வெங்காயமும் குறைந்தது. இதனால் நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடு-கிடுவென உயர்ந்தது. வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது. எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வெங்காயம் இறக்குமதி செய்து விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பருப்பு, முருங்கைக்காய் விலை ஏற்றம் அடைந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் வத்தல் (காய்ந்த மிளகாய்) விலை தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-
ரூ.75 அதிகரிப்பு
விளாத்திகுளம், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு மிளகாய் அதிக அளவில் வருகிறது. வடகிழக்கு மழையால் அந்த பகுதிகளில் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, மிளகாய் சாகுபடி குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ நீட்டு வத்தல் ரூ.135-க்கு விற்றது. தற்போது ரூ.75 அதிகரித்து, ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைப்போல் கடந்த வாரம் ஒரு கிலோ குண்டு வத்தல் ரூ.95-க்கு விற்றது, தற்போது ரூ.40 அதிகரித்து, ரூ.135 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது இந்த நிலைமையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து வத்தல் வாங்க முடிவு செய்துள்ளோம். அங்குள்ள வியாபாரிகள் தட்டுப்பாட்டை அறிந்து விலையை அதிகரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story