ராணிப்பேட்டை அருகே, தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு


ராணிப்பேட்டை அருகே, தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 Jan 2020 4:00 AM IST (Updated: 4 Jan 2020 1:35 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை அருகே அம்மூர்- லாலாப்பேட்டை சாலையில் அம்மூர் பேரூராட்சி மற்றும் செட்டித்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் ரசாயனம் மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்பதற்காக அம்மூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிற்சாலை குறித்தும், விரிவாக்கம் குறித்த விவரங்களை திரையிட்டு காட்டினர்.

இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், விவசாயிகள், தனியார் ரசாயன தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு தரப்பினரும், தொழிற்சாலையினால் நிலத்தடிநீர் கெட்டு விட்டது, இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய கூடாது என பேசினர்.

கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாததால் அதிகாரிகள் கூட்டத்தை விட்டு பாதியிலேயே எழுந்து சென்றனர். இதையடுத்து அதிகாரிகளை வெளியேற விடாமல் சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதனால் அதிகாரிகள் திரும்ப வந்து கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினர். பொதுமக்கள் தொழிற்சாலையின் பாதிப்புகள் குறித்தும், விவசாயிகள் பயிர்கள் பாழாவது குறித்தும் பேசினர். சிலர் தாங்கள் கொண்டு வந்த பாட்டில்களில் உள்ள நீரை காட்டி நீரின் தன்மையை பரிசோதித்து பாருங்கள் என அதிகாரிகளிடம் கூறினர்.

விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய கூடாது, தொழிற்சாலையை மூட வேண்டும் என சமூக ஆர்வலர் வக்கீல் ஜெயக்குமார், விவசாய சங்கத்தை சேர்ந்த எல்.சி.மணி மற்றும் ஏ.ஆர்.எஸ்.அருள்ராமன் உள்பட பொதுமக்களும், விவசாயிகளும் அதிகாரிகளிடம் கருத்துக்களை தெரிவித்தனர்.

அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்த அதிகாரிகள், பொதுமக்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சென்றனர்.

Next Story