வங்கியில் ரூ.1 கோடி மோசடி சம்பவம்: சி.பி.ஐ. அதிகாரிகள் தேனியில் விசாரணை

தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகள் அடகு வைத்து ரூ.1 கோடி மதிப்பில் மோசடி நடந்தது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
தேனி,
தேனி நகர் மதுரை சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம், நகைகளை திருப்பிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அடகு வைத்த நகைக்கு பதில், வேறு நகைகள் வழங்கப்பட்டது. நகைகள் மாறியது குறித்து வங்கி அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர். அதன்பேரில், வங்கி அதிகாரிகள் நகைகளை தணிக்கை செய்தனர்.
அதில் நகைகளை கையாடல் செய்தல், வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகள் அடகு வைத்தல் போன்ற மோசடி சம்பவங்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.1 கோடி அளவில் மோசடி நடந்து இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பையா கொடுத்த புகாரின் பேரில், வங்கியின் நகை மதிப்பீட்டாளர் செந்தில், அவருடைய உதவியாளர் வினோத் ஆகிய 2 பேர் மீதும் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த கடந்த நவம்பர் மாதம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் நகை மதிப்பீட்டாளர் செந்தில், வினோத் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மதுரையில் இருந்து சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படையினர் தேனிக்கு நேற்று வந்தனர். மாவட்ட குற்றப்பிரிவில் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்தனர்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வத்திடம் கேட்டபோது, ‘இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது தொடர்பான உத்தரவு தற்போது தான் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஓரிரு நாட்களில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story






