விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில், நல்ல பாம்பு வெளியே வந்ததால் பரபரப்பு


விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில், நல்ல பாம்பு வெளியே வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Jan 2020 5:15 AM IST (Updated: 4 Jan 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

தேனி-பெரியகுளம் சாலை விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் இருந்து நல்ல பாம்பு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி,

தேனி-பெரியகுளம் சாலையில் வாரச்சந்தை முன்பு நேற்று வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அந்த வாலிபர் தடுமாறி விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் எழுந்து ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கீழே விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு நல்லபாம்பு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை பார்த்து அங்கு நின்ற மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

மக்களை பார்த்ததும் அந்த பாம்பு மீண்டும் மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்து கொண்டது. இதையடுத்து பொதுமக்கள் சிலர் அந்த பாம்பை லாவகமாக வெளியே இழுத்தனர். அந்த பாம்பு சீறியதால், சிலர் கட்டையால் பாம்பை அடித்துள்ளனர். இதில் பாம்பு உயிரிழந்தது. அது சுமார் 4 அடி நீளம் கொண்டது. பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. விபத்தில் சிக்கிய வாலிபர் காயம் இன்றி உயிர் தப்பினார். அதே நேரத்தில் அந்த விபத்தில் அவர் சிக்கியதால் பாம்புவிடம் இருந்தும் அதிர்‌‌ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

Next Story