தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை - கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. பேட்டி

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்ைல என காரைக்குடி எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி கூறினார்.
காரைக்குடி,
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், காரைக்குடி எம்.எல்.ஏ.வுமான கே.ஆர்.ராமசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தேர்தல் அதிகாரிகள் முறையாக தேர்தலை நடத்தவில்லை. பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு பிறகும் தேர்தல் முடிவை அறிவிக்கவில்லை. அறிவித்த இடங்களிலும் சான்றிதழ்களை வழங்க தாமதப்படுத்தினர். வாக்கு எண்ணிக்கை முறையில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி தேர்தல் முடிவுகளை மிகவும் தாமதமாக, யாருடைய உத்தரவையோ எதிர்பார்த்து அதன்பின்னர் அறிவித்தனர். தேர்தல் ஆணையம் தெளிவாக வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது.
சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒருவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். அடுத்த சில மணி நேரத்தில், மற்றொருவரும் அதே பதவிக்கு வெற்றி பெற்றதாக அறிவித்தார். இருவருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழை கொடுக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. அந்த சான்றிதழை வழங்கிய பின் அதுவே சரியானது, தவறானது என்று கூறும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. சாக்கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் ஒருவர் சான்றிதழ் பெற இரவு முழுவதும் நின்ற பரிதாப நிலையும் ஏற்பட்டது. இது குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகளிடம் பதில் இல்லை. இதுவே தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் நிலைமை. தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றவர்கள் தான் தோற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வேன். மறு தேர்தலை நாங்கள் கேட்கவில்லை ஆனால் மக்கள் அளித்த வாக்குகளின், உண்மை நிலவரத்தை அனைவரும் அறியச்செய்வது அரசின் கடமை. தேர்தல் அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு ஆளுங்கட்சி தலைவர்களின் தலையீடுதான் காரணம். இவ்வாறு கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், நகர செயலாளர் குமரேசன், தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story