உப்பிலியபுரம் அருகே தண்ணீர் தொட்டியில் இருந்த விஷம் கலந்த நீரை குடித்து 3 பசுக்கள் செத்தன


உப்பிலியபுரம் அருகே தண்ணீர் தொட்டியில் இருந்த விஷம் கலந்த நீரை குடித்து 3 பசுக்கள் செத்தன
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-04T22:52:04+05:30)

உப்பிலியபுரம் அருகே தண்ணீர் தொட்டியில் இருந்த விஷம் கலந்த நீரை குடித்து 3 பசுக்கள் செத்தன. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் விஷம் கலக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அழகாபுரி ஊராட்சியில் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை உள்பட 4 பேர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் செல்லத்துரை வெற்றி பெற்றார்.

இவருடைய வெற்றிக்காக, இவருடைய சித்தப்பா மகன் வீராசாமி(வயது 48) தேர்தலின் போது மிக தீவிரமாக பிரசாரம் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீராசாமி தனது தோட்டத்தில் உள்ள 3 பசுக்களுக்கு தீவனம் வைத்துவிட்டு, அவற்றை தண்ணீர் குடிக்க அவிழ்த்து விட்டுள்ளார்.

3 பசுக்கள் செத்தன

அவை மூன்றும் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் கீழே விழுந்து செத்தன. இறந்த பசுக்களில் ஒரு பசு நேற்று காலை தான் கன்று ஈன்றது. மற்ற இரு பசுக்களும் சினையாக இருந்தன. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வீராசாமி, மாடுகளை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

பின்னர் இதுபற்றி உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பி.மேட்டூர் கால்நடை டாக்டர் முருகேசன் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு 3 மாடுகளையும் பிரேத பரிசோதனை செய்தார்.

விஷம் கலப்பு

அப்போது, தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து இருந்த தண்ணீரை பசுக்கள் குடித்ததால் தான் அவை இறந்தது தெரியவந்தது. இதனால் தண்ணீர் தொட்டியில் விஷத்தை கலந்தது யார்? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கலந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story