குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி செங்கோட்டையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி செங்கோட்டையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2020 4:30 AM IST (Updated: 5 Jan 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி செங்கோட்டையில் நேற்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 300 மீட்டர் நீள தேசிய கொடியுடன் அவர்கள் பங்கேற்றனர்.

செங்கோட்டை,

செங்கோட்டையில் நேற்று செங்கோட்டை வட்டார அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், புதிய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழக அரசை கண்டித்தும் பஸ்நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இமாம் சவுக்கத் அலி உஸ்மானி தலைமை தாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், த.மு.மு.க. மாநில செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்ட துணை செயலாளர் முகம்மது ஆரிப், நயினார் முகம்மது, அய்யா வழி சுவாமி பாலமுருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை செயலாளர் முகம்மது அலி ஜின்னா, இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கோதர் பாவா, ஐக்கிய ஜமாத் செயலாளர் குலாம், துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில் உள்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் காஜா முகைதீன் நன்றி கூறினார்.

தேசிய கொடியுடன் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்தில் 300 மீட்டர் நீள தேசிய கொடியுடன் பெண்கள் உள்பட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் அறிவுரையின் பேரில் துணை சூப்பிரண்டு கோகுல கிரு‌‌ஷ்ணன், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டையில் அனைத்து முஸ்லிம் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
1 More update

Next Story