கூட்டுறவு நிறுவனங்கள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தரவேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு


கூட்டுறவு நிறுவனங்கள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தரவேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 5 Jan 2020 4:45 AM IST (Updated: 5 Jan 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு நிறுவனங்கள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தர கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கூட்டுறவு பெட்ரோல் பங்குகளுக்கு அரசுத் துறைகள் மூலம் செலுத்தப்பட வேண்டிய பாக்கித்தொகை ரூ.2½ கோடி செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் அரசு வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கவேண்டாம் என்று நிர்வாகம் அறிவுறுத்தியது.

இதனால் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் காருக்கு ஊழியர்கள் பெட்ரோல் போட மறுத்துவிட்டனர். இதனால் அமைச்சர் கமலக்கண்ணன் புதுவை அரசு பஸ் மூலம் புதுச்சேரி வந்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கிரண்பெடி உத்தரவு

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி கூட்டுறவுத்துறை செயலாளர் அசோக்குமாருக்கு பிறப்பித்திருக்கும் உத்தரவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவுத்துறையிலிருந்தோ அல்லது வேறு அரசுத்துறையிலிருந்தோ கூட்டுறவு சங்கங்களை நடத்துவதில் மூத்த அரசு ஊழியர்களை நியமிக்கும் கொள்கையை நாம் அவசரமாக மறு பரிசீலனை செய்யவேண்டும். கூட்டுறவு பதிவாளர்களே தணிக்கை செய்பவர்கள் என்பதால் கூட்டுறவு சங்கங்களின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி சரியான முறையில் செய்யப்படவேண்டும்.

அவர்களே அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்களாகவோ, தலைவர்களாகவோ இருக்கும்போது எப்படி அவர்களால் சுயமாக தணிக்கை செய்ய முடியும்?

15 நாட்களுக்குள் அறிக்கை

சமீபத்தில் அமைச்சரின் காருக்கு பெட்ரோல் வழங்கப்படவில்லை. இது நீண்ட கால செயல்பாட்டின் விளைவாகும். அதற்கு அவசர திருத்தம் தேவை.

ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி, நிர்வாகம் மற்றும் செயல் திறன் குறித்து 15 நாட்களுக்குள் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க கூட்டுறவு செயலாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது யாருடைய தவறு? ஏன் தவறு? எப்போது முதல் இந்த தவறு நடக்கிறது? இதற்கான முக்கிய காரணம் என்ன? தணிக்கையின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து அவர் தெரிவிக்கவேண்டும்.

வாய்ப்பு உள்ளதா?

மேலும் யார் இதை இயக்குகிறார்கள்? இவற்றின் எதிர்காலம் என்ன? நிதி மற்றும் வேலைவாய்ப்புகளை பாதுகாக்க இவற்றை இயக்குவதற்கு ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா? அதை செய்ய என்ன முன்மொழிகிறீர்கள்? ஆகியவற்றை ஜனவரி 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக மூத்த அதிகாரிகளின் ஆலோசனை தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

தான் இப்போது வெளியூரில் இருப்பதால் இந்த உத்தரவு குறித்த கடிதம் வருகிற 7-ந்தேதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Next Story