மாப்பிள்ளையின் மூக்கு பெரியதாக இருப்பதாக கூறி நிச்சயித்த திருமணத்தை நிறுத்திய பெண் என்ஜினீயர்


மாப்பிள்ளையின் மூக்கு பெரியதாக இருப்பதாக கூறி நிச்சயித்த திருமணத்தை நிறுத்திய பெண் என்ஜினீயர்
x
தினத்தந்தி 4 Jan 2020 11:15 PM GMT (Updated: 4 Jan 2020 11:04 PM GMT)

மாப்பிள்ளையின் மூக்கு பெரியதாக இருப்பதாக கூறி நிச்சயித்த திருமணத்தை நிறுத்திய பெண் என்ஜினீயர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் கோரமங்களாவில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 35, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவருக்கு திருமண இணையதளம் ஒன்றின் மூலம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வரும் ரஷ்மி (35, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ரஷ்மி அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். ரஷ்மி, ரமேஷ் ஆகியோர் திருமணம் செய்து கொள்ள பரஸ்பர விருப்பம் தெரிவித்தனர்.

அதன்படி கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி ரஷ்மி பெங்களூரு வந்தார். இதையடுத்து எம்.ஜி.ரோட்டில் உள்ள ஓட்டலில் வைத்து ரஷ்மி, அவருடைய சகோதரி லட்சுமி ஆகியோரை சந்தித்து ரமேஷ் பேசினார். அதன்பிறகு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி ரமேசின் பெற்றோரும், ரஷ்மியின் பெற்றோரும் எஸ்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள ரஷ்மியின் வீட்டில் வைத்து 2 பேரின் திருமணம் குறித்து பேசினர்.

அதன்படி செப்டம்பர் மாதம் 9-ந் தேதி ரமேஷ்-ரஷ்மி ஆகியோருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமண தேதியும் குறிக்கப்பட்டது. அதன்படி வருகிற 30-ந் தேதி ரமேஷ்-ரஷ்மி ஆகியோரின் திருமணம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருமணத்தை திருப்பதி கோவிலில் வைத்து நடத்த வேண்டும் என்று ரஷ்மி, ரமேசின் தந்தையிடம் கூறியுள்ளார். இதை கேட்ட அவர் தங்களுக்கு பெங்களூருவில் தான் அதிகளவில் உறவினர்கள் உள்ளனர். இதனால் பெங்களூருவில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடத்தலாம் என்று கூறியுள்ளார். இதற்கு ரஷ்மி ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து திருப்பதி திருமலையில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ரமேசின் குடும்பத்தினர் மேற்கொண்டனர்.

அதன்படி திருப்பதியில் திருமணத்துக்கு வரும் உறவினர்களுக்காக 70 அறைகள் முன்பதிவு செய்தற்கு ரூ.2 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டது. சமையல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அத்துடன் ரூ.4 லட்சத்துக்கு ஆடைகள், பரிசுகள் பொருட்களை அவர்கள் வாங்கினர்.

இதற்கிடையே, ரஷ்மி திடீரென்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இதுபற்றி கேட்டதற்கு பெண் வீட்டினர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ரமேஷ், ரஷ்மியை தொடர்பு கொண்டு பேசியபோது, ‘தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணத்தை நிறுத்தி விடுங்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து ‘திருமணத்தை நிறுத்துவதற்கு காரணம் என்ன?’ என்று ரமேஷ் கேட்டதற்கு, ‘மூக்கு பெரியதாக (நீளமாகவும், தடிமனாகவும்) உள்ளது. இதனால் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை’ என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் தான், விரைவில் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்து தனது மூக்கின் தோற்றத்தை மாற்றிக்கொள்வதாக கூறியுள்ளார். இதை அவர் கேட்கவில்லை. அத்துடன் திருமணத்தை நிறுத்திவிடும்படி அவர் கூறியுள்ளார்.

ரஷ்மியிடம் பேசி அவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க ரமேஷ் முயன்றபோதிலும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஒவ்வொரு முறை செல்போனில் பேசியபோதும் ரஷ்மி, ரமேசின் மனம் நோகும்படி பேசியதாக கூறப்படுகிறது. இறுதியில் ரமேசின் செல்போன் எண்ணை அவர் ‘பிளாக்’ செய்தார். இதுபற்றி ரஷ்மியின் குடும்பத்தினரும் சரியாக பதில் அளிக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த ரமேஷ், கோர்ட்டில் ஒரு மனு செய்தார். அதாவது, தன்னை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்ததாக ரஷ்மி, அவருடைய சகோதரி லட்சுமி மற்றும் தந்தை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் இதே பாணியில் அவர்கள் வேறு சிலரையும் ஏமாற்றி இருக்கலாம் என்று அவர் சந்தேகம் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய கோர்ட்டு ரஷ்மி, லட்சுமி மற்றும் அவர்களின் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோரமங்களா போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி கோரமங்களா போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story