4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் பல்லவி பல்தேவ் தகவல்


4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் பல்லவி பல்தேவ் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:30 PM GMT (Updated: 5 Jan 2020 4:36 PM GMT)

தேனி மாவட்டத்தில் 4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

உப்புக்கோட்டை, 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, 2 கிலோ சர்க்கரை, 2 அடி நீளமுள்ள கரும்புத்துண்டு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன் ரூ.1,000 பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று தொடங்கி வைத்தார். உப்புக்கோட்டை அருகே உள்ள மல்லையகவுண்டன்பட்டியில் நடந்த விழாவில், அந்த கிராமங்களில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் வழங்கினார். பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலையையும் அவர் வழங்கினார்.

விழாவில் கலெக்டர் பல்லவி பல்லவி பல்தேவ் பேசியதாவது:-

தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 லட்சத்து 98 ஆயிரத்து 637 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்புத்துண்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அத்துடன் வேட்டி, சேலையும் வழங்கப்படும். மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 526 ரேஷன் கடைகள் மூலம் வருகிற 9-ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படஉள்ளது. ரேஷன் கார்டுதாரர்கள் எவ்வித சிரமமின்றி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். 1,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ள ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சீதாராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story