உடுமலையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் வழங்கினார்


உடுமலையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 2020-01-06T01:39:44+05:30)

உடுமலையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

உடுமலை, 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலாஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நேற்று உடுமலை வி.ஜி.ராவ் நகரில் உள்ள ரேஷன் கடையில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சுகுமார் தலைமை தாங்கி பேசினார். திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.பிரபு வரவேற்று பேசினார்.

விழாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ஆயிரம் ரூபாய், விலையில்லா வேட்டி-சேலை ஆகியவற்றை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பொங்கல் பரிசு தொகுப்பையும், அத்துடன் ரூ.500 வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தார். அவரது வழியில் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்பட்டு வந்த ரூ.500-ஐ ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கினார்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொது வினியோக திட்ட ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 21 ஆயிரத்து 56 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பரிசுத்தொகுப்பு மற்றும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்குவதற்கு ரூ.71 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் வட்டாரங்களுக்கு 1 லட்சத்து 37 ஆயிரத்து 611 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இவற்றை இங்கு வழங்கி தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர்(திருப்பூர்) கு.நர்மதா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஆர்.முருகேசன், மேலாண்மை இயக்குனர் எஸ்.ஏ.சாகுல் அமீது மற்றும் இயக்குனர்கள் செய்திருந்தனர். விழாவில் தாசில்தார் கி.தயானந்தன், குடிமைப்பொருள் தனித்தாசில்தார் விவேகானந்தன், பெரிய கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.பாலசுப்பிரமணியம், ஊராட்சி மன்றத்தலைவர் பேச்சியம்மாள், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் பி.சுப்பிரமணியம் உள்படபலர்கலந்துகொண்டனர்.

Next Story