4¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்


4¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 10:19 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 4¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

நல்லம்பள்ளி,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட கூட்டுறவு துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா அதியமான்கோட்டை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ் வரவேற்று பேசினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 4,24,971 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு துண்டு மற்றும் ரூ.1000 ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி இந்த பணியை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்த 931 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.இதேபோன்று தமிழக அரசின் விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 6,22,959 பயனாளிகளுக்கு வேட்டி-சேலைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

விழாவில் அமைச்சர் பேசுகையில், பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 1 கோடியே 95 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டு உள்ளார். இதற்காக ரூ.2,245 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை அந்தந்த ரேஷன்கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பயனாளிகள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சுப்பிரமணியன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர்கள் வேலுமணி, இயக்குனர் சிவப்பிரகாசம், கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் அரங்கநாதன், பூக்கடை முனுசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் அங்குராஜ், ஆறுமுகம், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், பொதுவினியோகத்திட்ட துணைபதிவாளர் வரதராஜன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் அதியமான்கோட்டை கூட்டுறவு சங்க தலைவர்அருவி நன்றி கூறினார்.

Next Story