பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 5 Jan 2020 10:42 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் வெற்றியைபோல் பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்று திருநள்ளாறில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

காரைக்கால், 

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேற்று குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஸ்டார் ஓட்டலில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி தனது அதிகார பலத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவது வழக்கம். ஆனால், இதனை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மக்கள் சக்தியுடன் முறியடித்து வெற்றி பெற்றுள்ளது.

அதிகார பலம் இருந்தும், தமிழக ஆளுங்கட்சியால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. இதனை பார்க்கும்போது, வரும் பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக சிறுபான்மையின மக்களை பா.ஜ.க. அரசு அச்சுறுத்துகிறது. இது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவுதான்.

உலகிலேயே கோலம் போட்டதற்கு கைது செய்யும் நடவடிக்கை பா.ஜ.க. ஆட்சியில்தான் நடந்துள்ளது. இது வேடிக்கை மட்டுமில்லை வேதனையும் கூட.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக காங்கிரஸ் கட்சி இருந்தும், கவர்னர் நாள்தோறும் தலையிடுவது வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் மத்திய அரசின் ஏஜென்டாக கவர்னர் செயல்படுகிறார். புதுச்சேரியில் நல்லாட்சி மலரவேண்டும் என்றால் கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story