வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு - திரளான பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு சயன கோலத்தில் வீற்றிருந்த நாராயணருக்கு சிறப்பு சோடஷ தீபாராதனை நடைபெற்றது. சயன கோலத்தில் வீற்றிருந்த நாராயணர், கோவிலின் வடபகுதியில் உள்ள சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை திரளான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
வாசுதேவநல்லூர் மேலரதவீதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாசலபதி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடந்து காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாசலபதி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க பரமபதவாசல் (சொர்க்கவாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாசுதேவநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பெருமாள் சயன கோலத்தில் தாயாருடன் காட்சி கொடுத்தார்.
மாலை 6.05 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. பெருமாள் நின்ற கோலத்தில் உபநய நாச்சியார்களுடன் காட்சி கொடுத்தார். பின்னர் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் காலையில் சுவாமி சயன நிலையில் காட்சி அளித்தார். மாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் காலையில் வரதராஜபெருமாள், வெங்கடாசலபதி சுவாமிகள் தேவியர்களுடன் சயன மண்டபத்தில் சயன கோலத்தில் காட்சி அளித்தனர். தொடர்ந்து மாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story