கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு
கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், க.பரமத்தி, தாந்தோணி, அரவக்குறிச்சி ஆகிய 4 ஒன்றியங்களுக்கு கடந்த 27-ந்தேதியும், குளித்தலை, தோகைமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு கடந்த 30-ந்தேதியும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த 2-ந்தேதி வாக்கு எண்ணும் பணி நடந்தது. தொடர்ந்து கடந்த 3-ந்தேதி மதியம் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 115 பேரும், அந்தந்த ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ஒன்றிய தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகித்த வட்டார வளர்ச்சி அதிகாரி முன்னிலையில் நேற்று பதவியேற்று கொண்டனர். இதேபோல் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கிராம ஊராட்சி அலுவலகங்களுக்கு சென்று பதவியேற்று கொண்டனர்.
இதேபோல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் 1-வது வார்டு கார்த்திக் (தி.மு.க.), 2-வது வார்டு அலமேலு (அ.தி.மு.க.), 3-வது வார்டு சிவானந்தம் (அ.தி.மு.க.), 4-வது வார்டு எம்.எஸ்.கண்ணதாசன் (அ.தி.மு.க.), 5-வது வார்டு தேன்மொழி (தி.மு.க.), 6-வது வார்டு வசந்தா (அ.தி.மு.க.), 7-வது வார்டு நந்தினிதேவி (தி.மு.க.), 8-வது வார்டு என்.தானேஷ் என்கிற முத்துக்குமார் (அ.தி.மு.க.), 9-வது வார்டு எஸ்.திருவிகா (அ.தி.மு.க.), 10-வது வார்டு நல்லமுத்து (அ.தி.மு.க.), 11-வது வார்டு இந்திரா (அ.தி.மு.க.), 12-வது வார்டு ரமேஷ் (அ.தி.மு.க.) ஆகியோர் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர். மூத்த உறுப்பினர் எம்.எஸ்.கண்ணதாசன், உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 115 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 157 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,397 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 12 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் நேற்று ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான பொறுப்புகளை ஏற்றனர். கரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர், ஒன்றியக்குழுத்தலைவர், துணை தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story