மும்பையில் கடந்த ஆண்டில் மட்டும் வீட்டை விட்டு வெளியேறிய 3,227 குழந்தைகள் மீட்பு


மும்பையில் கடந்த ஆண்டில் மட்டும் வீட்டை விட்டு வெளியேறிய 3,227 குழந்தைகள் மீட்பு
x
தினத்தந்தி 7 Jan 2020 12:22 AM GMT (Updated: 7 Jan 2020 12:22 AM GMT)

மும்பையில் கடந்த ஆண்டில் மட்டும் வீட்டைவிட்டு வெளியேறிய 3 ஆயிரத்து 227 குழந்தைகளை ரெயில்வே போலீசார் மீட்டுள்ளனர்.

மும்பை,

நாடு முழுவதும் போலீசார் ‘ஆபரேசன் முஸ்கான்' என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் காணாமல் போன குழந்தைகளை மீட்டு வருகின்றனர். இதில், மும்பை ரெயில்வே போலீசார் அதிகளவில் வீட்டைவிட்டு ஓடிவரும் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து வருகின்றனா்.

மும்பை ரெயில்வே போலீசார் 2017-ம் ஆண்டு மாயமான 3 ஆயிரத்து 256 ஆண், 1,302 பெண் குழந்தைகளை மீட்டு இருந்தனர். 2018-ம் ஆண்டு 1,613 ஆண், 872 பெண் குழந்தைகளை மீட்டு இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு மும்பை ரெயில்வே போலீசார் வீட்டைவிட்டு வெளியேறி ரெயில்நிலையங்களில் சுற்றித்திரிந்த 2 ஆயிரத்து 258 ஆண், 969 பெண் குழந்தைகள் என மொத்தம் 3 ஆயிரத்து 227 பேரை மீட்டு உள்ளனர். இதில் 1,729 குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். 1,292 குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.

இது குறித்து மூத்த ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இதில் பெரும்பாலான குழந்தைகள் குடும்பத்தினரிடம் சண்டைபோட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். சிலர் சினிமா நட்சத்திரங்களை பார்க்க ஆசைப்பட்டு மும்பை வருகின்றனர். மீட்கப்படும் குழந்தைகள் அரிதாக தான் சரியான வீட்டு முகவரியை கூறுகிறார்கள்’’ என்றார்.

Next Story