வாசுதேவநல்லூரில் சூறைக்காற்றுடன் மழை: 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை


வாசுதேவநல்லூரில் சூறைக்காற்றுடன் மழை: 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 8 Jan 2020 3:45 AM IST (Updated: 8 Jan 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 100 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.

வாசுதேவநல்லூர்,

வாசுதேவநல்லூர் ஊருக்கு மேற்கே பெரியகுளம், புதுக்குளம் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தற்போது நெல் பயிரிடப்பட்டு விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் நெல் விளைச்சல் முக்கிய பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் அறுவடை நடைபெறுவதாக இருந்தது.

இந்தநிலையில் குளத்து பாசனம் மூலம் விவசாயம் செய்யப்பட்டுள்ள வயல்வெளிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த சூறைக்காற்றுடன் மழ பெய்தது. இதில் நெற் பயிர்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டன. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நெற் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து பெரியகுளம் மூலம் பாசனம் செய்து வந்த விவசாயி பொன்னுத்துரை கூறுகையில், பொதுவாக ஒரு ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் நெல் கிடைக்கும். தற்போது சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் 25 முதல் 30 மூட்டைகள் வரை மட்டுமே கிடைக்கும் என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார். எனவே மாவட்ட நிர்வாகம் வயல் பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story