திருச்சி வங்கி கொள்ளை வழக்கு: முருகன் கோர்ட்டில் ஆஜர் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது இன்று விசாரணை


திருச்சி வங்கி கொள்ளை வழக்கு: முருகன் கோர்ட்டில் ஆஜர் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது இன்று விசாரணை
x
தினத்தந்தி 8 Jan 2020 3:21 AM IST (Updated: 8 Jan 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே நடந்த வங்கி கொள்ளை வழக்கு தொடர்பாக முருகன் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று (புதன்கிழமை) விசாரணை நடக்கிறது.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த அக்டோபர் மாதம் 2-ந்தேதி சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 28 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. திருச்சி கோட்டை போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிக்கொண்டிருந்த நேரத்தில் திருவாரூரில் மணிகண்டன் என்ற கொள்ளையன் நகையுடன் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருவாரூர் பக்கம் உள்ள சீராத்தோப்பு என்ற கிராமத்தை சேர்ந்த முருகன் தலைமையிலான கொள்ளையர்கள் தான் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

எனவே முருகனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில் முருகன் கர்நாடக மாநிலம் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். கர்நாடக மாநிலத்தில் முருகன் மீது பல கொள்ளை வழக்குகள் இருப்பதால் அந்த வழக்குகள் தொடர்பாக அம்மாநில போலீசார் அவரை அங்கு வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.பின்னர் திருச்சி போலீசார் பெங்களூருவுக்கு சென்று முருகனை லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்தனர். முருகனின் கூட்டாளியான சுரேஷ் உள்பட மேலும் சிலரும் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் திருச்சி கொள்ளிடம் டோல்கேட் அருகே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கிலும் முருகனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்புடைய நகை, பணத்தை மீட்பதற்காக முருகனை போலீஸ் காவலில் வைத்து 7 நாள் விசாரணை நடத்துவதற்காக அனுமதி கேட்டு கொள்ளிடம் போலீசார் ஸ்ரீரங்கம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். ஸ்ரீரங்கம் மாஜிஸ்திரேட்டு விடுமுறையில் சென்றதால் முருகனை நேற்று திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சோமசுந்தரம் முன் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். முருகன் சார்பில் ஹரி பாஸ்கர் என்ற வக்கீல் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார்.

முருகனை காவலில் வைத்து விசாரிக்ககோரி போலீசார் தாக்கல் செய்த மனு மற்றும், முருகனின் வக்கீல் தாக்கல் செய்த மனு மீது நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும் என்று மாஜிஸ்திரேட்டு சோமசுந்தரம் உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து முருகனை போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். இன்று முருகன் ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது தான் அவரிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு கோர்ட்டு எத்தனை நாள் அனுமதி வழங்கும் என்பது தெரியவரும்.
1 More update

Next Story