கண்களை கட்டிக்கொண்டு 32 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் பட்டுக்கோட்டை மாணவன் சாதனை


கண்களை கட்டிக்கொண்டு 32 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் பட்டுக்கோட்டை மாணவன் சாதனை
x
தினத்தந்தி 7 Jan 2020 11:18 PM GMT (Updated: 2020-01-08T04:48:15+05:30)

பட்டுக்கோட்டையில் கண்களை கட்டிக்கொண்டு 32 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து மாணவன் சாதனை படைத்தார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். என்ஜினீயர். இவருடைய மனைவி சித்திரவள்ளி. இவர்களுடைய மகன் ஆசிய்வ் (வயது9). பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் ஆசிய்வ் யோகா பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறான்.

மேலும் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதற்கு தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் மாணவன் ஆசிய்வ் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சாதனை முயற்சியை நேற்று மேற்கொண்டார்.

இதற்கான நிகழ்ச்சி பட்டுக்கோட்டை தனியார் விளையாட்டு அறக்கட்டளை சார்பில் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை டாக்டர் நியூட்டன் தலைமை தாங்கினார். டாக்டர் சதாசிவம் வரவேற்றார். அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வகுமார், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி சாதனை முயற்சியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பட்டுக்கோட்டை பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் இருந்து ஆசிய்வ் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கினான். மணிக்கூண்டு, முத்துப்பேட்டை சாலை, பொன்னவராயன்கோட்டை, அணைக்காடு, பைபாஸ் ரோடு, தஞ்சாவூர் சாலை, அண்ணாசிலை, அறந்தாங்கி சாலை, கொண்டிகுளம், குறிச்சி, துறவிக்காடு வழியாக திருச்சிற்றம்பலம் வரையிலான 32.1 கிலோ மீட்டர் தூரத்தை மாணவன் ஆசிய்வ், ஒரு மணி 49 நிமிடம் 6 விநாடிகளில் நிறைவு செய்து சாதனை படைத்தார்.

முன்னதாக 8 கிலோ மீட்டர் தூரம் கண்களை கட்டி சைக்கிள் ஓட்டியதே சாதனையாக பதிவாகி இருந்தது. இதை மாணவன் ஆசிய்வ் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கண்காணிப்பாளர் ஹரீஸ், சாதனை படைத்த மாணவனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்தர் சாதனையாளர் பரிசு கோப்பையை வழங்கினார். முடிவில் அறக்கட்டளை நிர்வாகி சிவசந்திரன் நன்றி கூறினார்.

Next Story