மாவட்டத்தில் 4 இடங்களில் மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் - 771 பேர் கைது
மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் 771 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு அனைத்து மோட்டார் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செங்குட்டுவன் எம்.எல்.ஏ. இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில், தொ.மு.ச. பேரவை செயலாளர் கிருஷ்ணன், கவுன்சில் தலைவர் பன்னீர்செல்வம், மின்கழக தொ.மு.ச. பசவராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முருகேசன், டாஸ்மாக் ரவிச்சந்திரன், சலவை தொழிலாளர் சங்கம் சிவக்குமார் மற்றும் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் அண்ணா சிலை எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 143 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
ஓசூரில், சி.ஐ.டி.யு. தொ.மு.ச. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலையருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் சிங்காரவேலு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.லகுமய்யா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மாதையன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 250 பெண்கள் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டு, ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். முன்னதாக, கைதானவர்களை போலீஸ் வேனில் ஏற்றும்போது, போலீசாருக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஓசூர் ரெயில் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சேதுமாதவன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
அதே போல ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டையிலும் மத்திய தொழிற்சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 4 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 771 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story