‘6 பெண்களை திருமணம் செய்தேன்’ - மோசடி வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி பரபரப்பு வாக்குமூலம்

6 பெண்களை திருமணம் செய்தேன் என்று மோசடி வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சேலம்,
சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (வயது 40), மாற்றுத்திறனாளி. இவர் மீது அம்மாபேட்டையை சேர்ந்த ஆசிப் அலி (24) என்பவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், டேவிட் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.
இதேபோல் சேலத்தை சேர்ந்த பலர் அவர் மீது சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த டேவிட் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தரவேண்டும் என கூறியுள்ளனர். டேவிட்டை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக டேவிட்டிடம், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 6 பெண்களை திருமணம் செய்ததாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கண்பார்வை குறைபாடு உள்ள டேவிட் பஸ், ரெயில்களில் திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்து உள்ளார். அப்போது அவர் அருகில் அமரும் பெண்களிடம் தனக்கு கண் தெரியாது என்றும் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன் என்று முதலில் பேச்சு கொடுப்பார். பின்னர் அந்த பெண்களின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு சில நாட்கள் கழித்து அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார். ஏழை பெண்களிடம், மோசடி செய்த பணத்தை கொடுத்து தன்வசமாக்கிக்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
அதன்பிறகு அவர்களை திருமணமும் செய்து உள்ளார். அதன்படி 6 பெண்களை திருமணம் செய்துள்ளார். இதில் 5 பெண்கள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். தற்போது மொரப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் குடும்பம் நடத்தி வருகிறார். சமீப காலமாக மோசடியில் ஈடுபடாமல் இருப்பதாக விசாரணையின் ்போது தெரிவித்து உள்ளார். ஆனால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story