விதிகளை மதிக்காத மனிதர்களுக்கு மத்தியில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நாய்


விதிகளை மதிக்காத மனிதர்களுக்கு மத்தியில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நாய்
x
தினத்தந்தி 8 Jan 2020 11:15 PM GMT (Updated: 8 Jan 2020 8:26 PM GMT)

சென்னை கோயம்பேடு-விருகம்பாக்கம் சாலையில் உள்ள சின்மயா நகர் பகுதியில் ‘ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் இந்த நாயின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பூந்தமல்லி,

இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து போலீசார் ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம், அதனால் உண்டாகும் நன்மைகள் குறித்து வாகன ஓட்டிகளிடம் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

என்னதான் உருக்கமாக பல விதங்களில் விழிப்புணர்வு மேற்கொண்டாலும், சிலர், இதையெல்லாம் காதில் ஏற்றிக்கொள்ளாமல் ‘ஹெல்மெட்’ அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இத்தகைய உயிர்காக்கும் சட்டத்தை மதிக்காத ஆறறிவு கொண்ட மனிதர்கள் மத்தியில், ஐந்தறிவு உள்ள நாய் ஒன்று ‘ஹெல்மெட்’ அணிந்தபடி தனது உரிமையாளருடன் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு-விருகம்பாக்கம் சாலையில் உள்ள சின்மயா நகர் பகுதியில் ‘ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் இந்த நாயின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்லும் நபரின் பின்னால் ‘ஹெல்மெட்’ அணிந்து அமர்ந்தவாறு, முன்னால் இருப்பவரின் தோல் மீது இரண்டு முன்னங்கால்களை வைத்தபடி மனிதர்களைப்போல் அமர்ந்து ஹாயாக நகரை கலக்கி வருகிறது இந்த பொறுப்பு மிக்க நாய். உற்றுப்பார்த்தால்தான் அது மனிதர் அல்ல... நாய் என்பது மற்றவர்களுக்கு தெரியவருகிறது.

விதிமுறைகளையும், சட்டங்களையும் மதிக்காத மனிதர்களுக்கு, இந்த நாயின் செயல் ஒரு சாட்டையடி விழிப்புணர்வு என்றால் அது மிகையல்ல..

Next Story