எஸ்.சி., எஸ்.டி. தொகுதி இடஒதுக்கீட்டை காந்தியும், நேருவும் எதிர்த்தனர்; பா.ஜனதா எம்.எல்.சி. பேச்சால் மேல்-சபையில் அமளி

எஸ்.சி., எஸ்.டி. தொகுதி இடஒதுக்கீட்டை காந்தியும், நேருவும் எதிர்த்தனர் என்று பாரதீய ஜனதா எம்.எல்.சி. பேசியதால் மராட்டிய மேல்-சபையில் அமளி உண்டானது.
மும்பை,
நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வகை செய்யும் மத்திய அரசின் அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மராட்டிய சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த சிறப்பு கூட்டத்தின் போது மேல்-சபையில் பாரதீய ஜனதா எம்.எல்.சி. பிரவீன் தரேகர் பேசுகையில், “அரசியலமைப்பு சபையின் வட்டமேஜை விவாதத்தின் போது, சட்டமேதை அம்பேத்கர் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு என்று தேர்தல் தொகுதிகளை ஒதுக்குவதற்கான திட்டத்தை முன் வைத்தார். அப்போது ஜவகர்லால் நேருவும், மகாத்மா காந்தியும் அதை எதிர்த்தனர்” என்று கூறினார்.
பிரவீன் தரேகரின் இந்த பேச்சுக்கு கபில் பாட்டீல் எம்.எல்.சி, காங்கிரசை சேர்ந்த சரத் ரன்பிஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கபீல் பாட்டீல் பேசும்போது, “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பயன்படுத்திய அதே குறிப்பை பிரவீன் தரேகர் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் உண்மைகளை சிதைத்து உள்ளார். அவர் தனது பேச்சை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இது தொடர்பான விவாதத்தால் மேல்-சபையில் அமளி உண்டானது. இதையடுத்து, மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர் அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
பின்னர் சபை கூடியபோது, பிரவீன் தரேகரின் பேச்சு விவரங்களை ஆய்வு செய்து தேவைப்பட்டால் தவறான குறிப்புகளை அகற்றுவதாக மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர் உறுதியளித்தார்.
Related Tags :
Next Story