குழித்துறை அருகே, ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - ‘செல்பி' மோகத்தால் விபரீதம்


குழித்துறை அருகே, ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - ‘செல்பி மோகத்தால் விபரீதம்
x
தினத்தந்தி 10 Jan 2020 3:45 AM IST (Updated: 10 Jan 2020 6:09 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை அருகே ‘செல்பி' மோகத்தால் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சோக சம்பவம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

களியக்காவிளை,

கேரள மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன். இவருடைய மகன் அஸ்வின் (வயது 19), களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர் அபய் (19). இவரும் பி.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அஸ்வின், அபய் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் குமரி மாவட்டத்தை சுற்றி பார்ப்பதற்காக வந்தனர்.

குழித்துறை அருகே கொக்குடி பகுதியில் தாமிரபரணி ஆற்றை ரசித்துக்கொண்டிருந்த மாணவர்கள் உயரமான பாறைகளில் ஏறி ‘செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அஸ்வின் ஆற்றில் தவறி விழுந்து விட்டார். தன்னை காப்பாற்றும் படி கூறிக்கொண்டே அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அபய் உடனே ஆற்றில் குதித்து தன் நண்பரை காப்பாற்ற முயன்றார். ஆனால் 2 பேருக்குமே நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி விட்டனர்.

இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக களியக்காவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அஸ்வினும், அபயும் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதனையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுற்றுலா வந்த இடத்தில் 2 மாணவர்களும் பலியான சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story