2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்


2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்
x
தினத்தந்தி 11 Jan 2020 12:15 AM GMT (Updated: 10 Jan 2020 8:21 PM GMT)

2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகளை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். சிறந்த நடிகராக ராகவேந்திரா ராஜ்குமாரும், சிறந்த நடிகையாக மேகனா ராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு, 

கர்நாடக அரசு சார்பில் ஆண்டுதோறும் கன்னட திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் கடந்த 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2018-ம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளர்களை தேர்வு செய்ய பசந்த்குமார் பட்டீல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தேர்வு பட்டியலுடன் தனது அறிக்கையை என்னிடம் வழங்கியது. அதை தற்போது வெளியிட்டுள்ளேன். 3 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அந்த வாழ்நாள் சாதனைக்காக டாக்டர் ராஜ்குமார் விருதுக்கு ஜே.கே.சீனிவாசமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புட்டண்ண கனகல் விருது, சேஷாத்திரி என்பவருக்கும், விஷ்ணுவர்தன் விருது பி.எஸ்.பசவராஜூவுக்கும் வழங்கப்படுகிறது.

அதே போல் இயக்குனர் ஜோசைமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 2018-ம் ஆண்டில் சிறந்த படம் மற்றும் நடிகர்-நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ‘ஆ கராள ராத்திரி’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ராமன சவாரி’ என்ற படம் 2-வது சிறந்த படமாகவும், ‘ஒந்தல்லா எரடல்லா’ 3-வது சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

சமூக அக்கறை உள்ள படங்களில் ‘சந்தகவி கனகதாசர ராமதான்ய’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பொழுதுபோக்கு படமாக ‘சர்க்கரி இரிய பிராதமிக சாலே காசர்கோடு’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த குழந்தைகள் படமாக ‘ஹூவு பல்லி’, மிக சிறந்த கர்நாடக மண்டல மொழி படமாக ‘தேயி பைதேவி’ (துளு) படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகராக ராகவேந்திரா ராஜ்குமார் (அம்மனே மனே), சிறந்த நடிகையாக மேகனா ராஜ் (இருவதெல்லவ பிட்டு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த கதை ஆசிரியராக எஸ்.ஹரீஷ் (நாயிகெரேரே), சிறந்த திரைக்கதை ஆசிரியராக சேஷாத்திரி (மூகஜ்ஜிய கனசுகளு), சிறந்த வசனகர்த்தாவாக சிரிசா ஜோஷி (சாவித்திரிபாய் புலே) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சிறந்த புகைப்பட கலைஞராக நவீன்குமார் (அம்மச்சியெம்ப நெனபு), சிறந்த இசையமைப்பாளராக ரவி பஸ்ரூர் (கே.ஜி.எப்.), சிறந்த குழந்தை நட்சத்திரமாக பேபி சிஞ்சன (அந்தவாத), சிறந்த கலை இயக்குனராக ஜே.சிவக்குமார் (கே.ஜி.எப்.),

சிறந்த பாடலாசிரியராக பரகூரு ராமச்சந்திரப்பா (பயலாட பீமண்ண), சிறந்த பின்னணி பாடகராக சித்தார்த் பேல்மன்னு), சிறந்த பின்னணி பாடகியாக கலாவசி தயானந்த் (தேயி பைதேதி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த ஆவணப்படமாக ‘படுவாரள்ளி’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story